ஜானகி அம்மா 1957ல் வெளியான விதியின் விளையாட்டு படத்தில் முதன் முதலாக பாடியதுடன், காரைக்குறிச்சி அருணாச்சலம் அவர்களின் நாதஸ்வரத்துடன் தனிக்குரலாய் சிங்கார வேலனே தேவா பாடலாகட்டும், தூக்கம் உன் கண்களை, ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி என சில பாடல்கள் பாடியிருந்தாலும் முதன் முதலில் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் அவரை கொண்டு சேர்த்தது அன்னக்கிளி படத்தில் அவர் பாடிய 3 முத்தான பாடல்கள் என்று தான் சொல்லனும். கூகலூர் (கோபியில் இருந்து 8 கி.மி) என்ற கிராமத்தில் இருந்த ராஜா திரையரங்கில் 6.30 மணிக்கு ஒலிக்க ஆரம்பிக்கும் பாடல்களில் கடைசி பாடலாக 7.20 மணி அளவில் சிங்கார வேலனே தேவா பாடல் தான் பாடி முடிவு பெறும். அந்த பாடல் பாடி ஒலித்த பின் சரியாக 7.30 மணிக்கு படம் போடுவார்கள்.. அன்றைய காலகட்டங்களில் கிராமப்புற தியேட்டர்களில் படம் போடுவதற்கான ஒரு குறியீடாகவே இந்த பாடல் ஒலிக்கும் அளவு பிரசித்தி பெற்றது.
Dienstag, 23. April 2024
அன்னக்கிளி படம் வெளியான பிறகு நகர்ப்புற பெண்களின் உதடுகளில் “அன்னக்கிளி உன்னை தேடுதே” பாடலின் முனுமுனுப்பும், கல்யாண வீடுகளில் “சுத்த சம்பா பச்ச நெல்லு குத்த தான் வேணும்” பாடலும், கிராமப் புரத்து மாந்தரின் உள்ளங்கள் “மச்சானை பார்த்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே” பாடலுடனும் தான் ரீங்காரமிட்டு பட்டி தொட்டி எங்கும் உற்சாகமூட்டி கொண்டிருந்தது. தொடர்ந்து இசைஞானி மற்றும் பிற இசை அமைப்பாளர்கள் இசையில் வித்தியாசமான வாய்ஸ் மாடுலேசனில் பாடிய பல பாடல்கள் இவரின் தனித்துவமான திறமையை தமிழ் திரை இசை உலகிற்கு பறைசாற்றியது.
ருசி கண்ட பூனை படத்தில் வரும் “கண்ணா நீ எங்கே” என்ற இந்த பாடல் வரிகளை ஜானகிமா எழுதியதுடன் ஆண் குழந்தை குரலிலும் பாடி அசத்தினார். மேலும் குழந்தை குரல்களில் டூத் பேஸ்ட் இருக்கு (சங்கர் கணேஷ்) டாடி டாடி ஓ மை டாடி (கங்கை அமரன்) சின்ன சின்ன பூவே (சந்திரபோஸ்) டூயட் குழந்தை என இரு குரலில் பாடிய ஒரு ஜீவன் தான் உன் பாடல் (விஜய் ஆனந்த்) இப்படி உதாரணமான பாடல்களை குறிப்பிட்டு சொல்லலாம். அதே போல செக்சியான குரலில் உதாரணமாக “பொன்மேனி உருகுதே, நேத்து ராத்திரி அம்மா” பாடல்கள், வயதான பெண்மணி குரலில் போடா போடா பொக்கே (உதிரிபூக்கள்), அப ஸ்ருதியுடன் பாடுவது போல கோழிக்கூவுது படத்தில் பிந்துகோஸ் பாடும் “ஆயர்பாடி கண்ணனே அன்பு” பாடல், வெள்ளந்தியான கிராமத்து பெண் பாடுவது போன்ற இவருக்கு தேசிய விருதை பெற்று தந்த “இஞ்சி இடுப்பழகா மஞ்ச செவப்பழகா” என இவர் பாடிய பாடல்களின் பரவசத்தை அடுக்கிக் கொண்டே செல்ல முடியும்.
சரவணன் நடராஜன் சாருடன் ஒரு நாள் போனில் பேசீட்டு இருக்கும் போது ஜானகி அம்மா அவருடன் பகிர்ந்து கொண்ட விசயத்தை பற்றி நம்மிடம் சொல்லிய போது உடல் மயிர் கூச்சத்தால் சிலிர்த்து விட்டது. அதாவது புதுப்பாட்டு படத்தில் “"Ich Libe Dich" என்ற பாடல் முழுக்க ஜெர்மனிய மொழியில் எழுதப்பட்டு பாடுவதாக அமைந்திருக்கும். ஜானகி அம்மாவை அழைத்து இந்த பாடலை பாட சொன்னவுடன் இந்த பாடல் வரிகளை வாங்கிக் கொண்டு ஜெர்மன் கற்று தரும் ஒருவரிடம் 15 நாட்கள் டியூசன் சென்று அந்த பாடல் வரிகளின் அர்த்தத்தையும் உச்சரிக்கும் விதத்தையும் நன்கு கற்று தேர்ந்து பிறகு தான் பாடினாராம். எவ்வளவு அற்பணிப்பும் பாடும் தொழிலில் கண்ணியமும் கொண்டுள்ளார் என்பதற்கு இந்த நிகழ்வே ஒரு அரிய சாட்சியமாக இருக்கும்.
“நான் பாடுவது முழுக்க கடவுள் அனுகிரஹத்தால தான். என்னுடைய 38ஆவது வயதில இருந்தே ஆஸ்துமா பிரச்சினை, டிரக் அலர்ஜி, டஸ்ட் அலர்ஜி, சில மருந்தெல்லாம் சாப்பிட்டா கூட கண்ணு வீங்கி நெஞ்சி அடச்சி ரொம்ப கஷ்டபடுவேன். அப்படி தான் இந்த மூச்சு பிரச்சினையோட எத்தனை பாடல் பாடினேன்னு யாருக்குமே தெரியாது. சுமை தாங்கி படத்தில் “ராதைக்கேற்ற கண்ணனொ” ஆலயமணியில் “தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே” பாடலெல்லாம் பாடும் போது அவ்வளவு மூச்சு திணறல் வந்து நெஞ்சு வெடிக்கற மாதிரி இருக்கும்,. கண்ணெல்லாம் இருண்டுகிட்டு போகும். அப்படியே அடக்கிகிட்டு கல்லாட்டம் நின்னு பாடினேன். இதெல்லாம் யாருக்குமே தெரியாது என் கணவரை தவிர. அவர் நான் பாடி முடிக்கும் வரை பயங்கர டென்சனா தவிப்போட இருப்பாரு... – ஜானகிமா
திரை இசை உலகம் கண்ட மாபெரும் பொக்கிசம் ஜானகி அம்மா. இவருக்கு கிடைத்த ஞான கான சரஸ்வதி என்ற பட்டம் இலங்கையில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. தனது குரலாலும் மனதாலும் குழந்தையாகி ஒவ்வொரு மனித உயிரின் சுவாசத்தையும் புத்துணர்வாக்கிய அபிநய சரஸ்வதி ஜானகி அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்… 


Abonnieren
Kommentare zum Post (Atom)

Keine Kommentare:
Kommentar veröffentlichen